பரப்பனஅக்ரஹாராவில் இருந்து 19 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

பெங்களூருவில் சிறையில் இருந்து கொண்டு கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபட்ட 19 கைதிகள் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் கமல்பந்த் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Update: 2021-08-15 20:44 GMT
பெங்களூரு:

கூட்டாளிகள் மூலம் குற்றங்கள்

  பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 4,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் ரவுடிகளாக இருப்பவர்கள், சிறையில் இருந்த படியே தங்களது கூட்டாளிகள் மூலம் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். அதாவது தொழில்அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகளை கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

  சமீபத்தில் கூட சிறையில் இருந்த படியே சில ரவுடிகள் தங்களது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்களை கூட்டாளிகள் மூலம் தீர்த்து கட்டி இருந்தார்கள். மேலும் அந்த ரவுடிகள் சட்டவிரோதமாக சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

19 கைதிகள் மாற்றம்

  இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகனுடன், போலீஸ் கமிஷனர் கமல்பந்த் ஆலோசனை நடத்தினார். பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருக்கும் சில ரவுடி கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அலோக் மோகனிடம், அவர் கேட்டு இருந்தார். இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 19 ரவுடி கைதிகள், கர்நாடகத்தில் உள்ள பல்வேறு சிறைகளுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  அதன்படி, ரவுடிகளான நாகராஜ் என்ற நாகா, பூர்னேஷ், கானிக் ராஜ், கமல் ஆகிய 4 பேரும் பெங்களூருவில் இருந்து கலபுரகி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிவு, தினேஷ், பிரவீன் ஆகிய 3 கைதிகள் பெலகாவி ஹிண்டல்கா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இதுபோன்று மற்ற 12 கைதிகளும் பரப்பனஅக்ரஹாராவில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்