மத்திய அரசு எதை செய்தாலும் காங்கிரஸ் எதிர்ப்பது சரியல்ல; தேவேகவுடா பேட்டி
மத்திய அரசு எதை செய்தாலும் அதை காங்கிரஸ் எதிர்ப்பது சரியல்ல என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு:
விவசாயிகள் பிரச்சினை
ஜனதா தளம் (எஸ்) சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விலைவாசி உயர்வு, கொரோனா, விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பிடிவாத போக்கால் எந்த பிரச்சினை குறித்தும் விவாதம் நடைபெறவில்லை. ஒரு மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டது. இனிமேலாவது தேசிய கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் போராடுவோம்
மத்திய அரசு எதை செய்தாலும் அதற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இது நல்லதல்ல. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி மக்களவை, மாநிலங்களவையை உருவாக்கினார். அவற்றின் மாண்புகளை குறைத்துக் கொண்டு வருவது சரியல்ல. நான் இனி கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவேன். கர்நாடக அரசு தவறான பாதையில் சென்றால் அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
கொரோனா உலக பிரச்சினை. கொரோனா 3-வது அலை தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இவற்றை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேகமாக மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாட்டை நீக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.