மழை குறைந்ததால் விவசாய பணிகள் தீவிரம்

ஊட்டியில் மழை குறைந்ததால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2021-08-15 20:31 GMT
ஊட்டி

ஊட்டியில் மழை குறைந்ததால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காய்கறிகள் அறுவடை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

ஊட்டியை சுற்றி அணிக்கொரை, ஆடாசோலை, இடுஹட்டி, தும்மனட்டி, எம்.பாலடா, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை மழை ஓரளவு குறைந்து பின்னர் அறுவடை செய்யும் பணி நடந்தது. பின்னர் காய்கறிகளை விவசாயிகள் நகராட்சி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

குறைந்த விலைக்கு...

தொடர்ந்து அடுத்து பயிரிடுவதற்காக விளைநிலங்கள் உழுது தயார் செய்யப்பட்டது. பின்னர் பாத்திகள் அமைக்கப்பட்டு, கேரட், முட்டைகோஸ், பூண்டு போன்ற பயிர்கள் நாற்றுகளாக நடவு செய்யப்பட்டதோடு, விதைப்பும் மேற்கொள்ளப்பட்டது. 

மழை குறைந்ததால் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் பூண்டு செடிகள் சாய்ந்தன. பூண்டு அழுகும் அபாயம் ஏற்பட்டதால், விவசாயிகள் அறுவடை செய்து தார்ப்பாய் கொண்டு மூடி வைத்தனர். பின்னர் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனையானது.

விவசாயிகள் ஆர்வம்

தற்போது உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு, பட்டாணி, அவரை போன்றவற்றுக்கு நல்ல விலை இருப்பதால், அதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலைப்பிரதேசம் என்பதால் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். 

தொடர் மழை பெய்தால் மலைச்சரிவில் விளைநிலங்கள் சரிந்து பயிர் வீணாகிவிடும். பரவலாக மழை பெய்தால் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதுடன், தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். மழைநீரை சேமித்து வைக்க சில இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்