463 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்
சுதந்திரதின விழாவில் 463 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
விருதுநகர்,
சுதந்திரதின விழாவில் 463 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
சுதந்திர தின விழா
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நேற்று காலை 9.05 மணியளவில் கலெக்டர் மேகநாத ரெட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 75 போலீசார், 10 தீயணைப்பு படையினர், 10 சிறைத்துறையினர் உள்பட 463 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
கலை நிகழ்ச்சி
கொரோனாதடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, தாசில்தார்கள் அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன், ராஜபாளையம் ராமச்சந்திரன், சிவகாசி ராஜ்குமார், வத்திராயிருப்பு மாதா உள்ளிட்டோருக்கும் நற்சான்று வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் மேகநாதரெட்டியை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நீதிமன்றம்
விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிந்துமதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் நீதிபதி சரண், சார்பு நீதிபதி சதீஷ் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள் மருதுபாண்டி, நிஷாந்தினி, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியனில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சையது முஸ்தபா கமால் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் தேசபந்து திடலிலுள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.