70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.
சுதந்திர தின விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சாய் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உட்பட 17 போலீசாருக்கும், 54 அரசு அலுவலர்களுக்கும், 91 டாக்டர்களுக்கும், ஒரு தொண்டு நிறுவனத்திற்கும் என மொத்தம் 163 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து வருவாய்த்துறையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 17 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், 5 நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையும், வேளாண்மைத்துறை சார்பில் சிறந்த விவசாயிகளுக்கான விருதாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் 5 நபர்களுக்கு 50 ஆயிரத்துக்கான காசோலையும், தோட்டக்கலை துறை சார்பில் 15 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து ஆயிரத்து 174 மதிப்பில் மரக்கன்றுகளும், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காசோலையும் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 174 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலாஜி, நாராயணன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.