ராணிப்பேட்டையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக்கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக்கொடி ஏற்றிவைத்து, 62 பயனாளிகளுக்கு, 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிப்காட்
கலெக்டர் கொடியேற்றினார்
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 75-வது சுதந்திரதின விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக பள்ளி வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை வார்டுகளில் பணியாற்றிய 10 தூய்மைப் பணியாளர்கள், 5 டாக்டர்கள், 108 வாகனத்தில் பணியாற்றிய 2 பேர், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 பேர், வருவாய்த் துறையைச் சேர்ந்த 21 பேர், மற்றும் மகளிர் திட்டத்துறை அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, மாவட்டத் தொழில் மையம் சார்பில் மொத்தம் 62 பயனாளிகளுக்கு, ரூ.38 லட்சத்து 31 ஆயிரத்து 88 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ஜெயராமன், நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளவரசி, துணை கலெக்டர்கள் சேகர், சத்திய பிரசாத், தாரகேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், தாட்கோ மேலாளர் பிரேமா, கலெக்டர் அலுவலக மேலாளர் விஜயகுமார், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கே சென்று கவுரவித்தனர்
கொரோனா தொற்று பரவல் காரணமாக சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சுதந்திர தின விழாவில் கவுரவிப்பது தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி தொல்காப்பியர் தெருவில் உள்ள லோகநாதன் என்ற சுதந்திரப் போராட்ட தியாகிக்கும், வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாக்களில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் 26 பேரை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் நேரடியாக தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களின் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.