லத்தேரியில் வாரச்சந்தைக்கு தடை. வட்டார வளர்ச்சி அலுவலரை, வியாபாரிகள் முற்றுகை
லத்தேரியில் வாரச்சந்தைக்கு தடைவிதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலரை, வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
கே.வி.குப்பம்
வாரச்சந்தைக்கு தடை
கே.வி.குப்பம் தாலுகாவில் லத்தேரியில் ஞாயிற்றுக் கிழமையும், கே.வி.குப்பத்தில் திங்கட்கிழமையும், வடுகந்தாங்கலில் புதன்கிழமையும் என வாரத்தில் 3 நாட்கள் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கொரோனா 3-வது அலை தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் சந்தைகளுக்கு கலெக்டர் தடைவிதித்து உள்ளார்.
இந்தத் தகவலை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாரச்சந்தைகள் நடத்தக்கூடாது என்பதை தண்டோரா மூலமும், அறிவிப்புகள் எழுதி வைத்தும் வியாபாரிகளுக்கு ஒருநாள் முன்னதாகத் தெரிவித்து இருந்தார். இதை அறியாதவர்கள் வழக்கம்போல நேற்று லத்தேரி வாரச்சந்தையில் கடைகள் வைக்க வந்தனர். ஆனால் கடைகள் வைக்கவிடாமல் போலீசார் தடுத்து விட்டனர்.
வியாபாரிகள் முற்றுகை
இதனால் தாங்கள் கொண்டுவந்த காய்கறிகள், கீரைகள் வீணாகிவிடும். இதை விற்றுவிட்டுச் செல்ல போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சுமார் 50 வியாபாரிகள் திரண்டுவந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்து முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு அவர் கலெக்டர் உத்தரவவை மீறி என்னால் ஒன்றும் செய்யமுடியாது. சந்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று வியாபாரிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்து திருப்பி அனுப்பிவைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.