வீடு புகுந்து 6¾ பவுன் நகை கொள்ளை
வீடு புகுந்து 6¾ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
காரைக்குடி, ஆக. 16 -
காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாள் (வயது 50). இவர்களது மகள் ஐஸ்வர்யா (29) பிரசவத்திற்காக தனது மகள் அழகம்மை யோடு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கர்ப்பிணி ஐஸ்வர்யாவுக்கு ஊசி போடுவதற்காக அருகில் உள்ள நர்ஸ் சாந்தி (32) என்பவர் தனது மகன் மதியோடு (14) அங்கு வந்துள்ளார். வீட்டில் 5 பேர் இருந்துள்ளனர். அப்போது 25 வயதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க 4 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்து கத்தியை காட்டி மிரட்டி, ஐஸ்வர்யா கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் சாந்தி, மீனா அணிந்திருந்த தோடு, மோதிரம் உள்ளிட்ட 6 ¾ பவுன் நையை பறித்துக்கொண்டனர். பின்னர் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி கதவை வெறிப்புறமாக பூட்டி உள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த 3 செல் போன்கள், ரூ 10 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தை காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.