தர்மபுரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கலெக்டர் திவ்யதர்சினி தேசிய கொடி ஏற்றினார்

தர்மபுரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி தேசிய கொடி ஏற்றினார்.

Update: 2021-08-15 15:24 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி தேசிய கொடி ஏற்றினார்.
சுதந்திர தின விழா
தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காலை 9.05 மணிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.  விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் சிறந்த அலுவலகத்துக்கான விருது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும், சிறந்த தாலுகாவுக்கான விருது தர்மபுரி தாலுகா அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறந்த மருத்துவமனைக்கான விருது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கே.வி. மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 53 ஆயிரத்து 304 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கலை நிகழ்ச்சி ரத்து
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஒரு கலை நிகழ்ச்சி மட்டும் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அவரவர் வீடுகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன், முதன்மைகுற்றவியல் நடுவர் ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையாளர் சித்ரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்