திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக குறுவை சாகுபடி இலக்கை தாண்டி சாதனை

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரத்து 448 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான இலக்கையும் தாண்டி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-08-15 14:27 GMT
திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரத்து 448 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான இலக்கையும் தாண்டி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 90 ஆயிரம் ஏக்கர் ஆகும். இந்த ஆண்டு 88 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு வேளாண் துறையால் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஒரு லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 
இதனிடையே 173 வாய்கால்களை ரூ.16 கோடியே 34 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருந்ததால் குறுவை சாகுபடி பணி முழு வீச்சில் நடைபெற்றது. 

40 ஆயிரம் ஏக்கர் கூடுதல்

இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான சாகுபடி இலக்கையும் தாண்டி சாகுபடி நடைபெற்று உள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு மூலம் 30 ஆயிரத்து 125 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 17 ஆயிரத்து 490 ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 89 ஆயிரத்து 745 ஏக்கரிலும் என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 96 ஆயிரத்து 912 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட கூடுதலாக 40 ஆயிரத்து 448 ஏக்கர் கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், ‘உரிய காலத்தில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதுடன், தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஊள்ளது. மேலும் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 720 டன் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் குறுவை சாகுபடிக்கு வழங்கப்பட்டு உள்ளது. 
100 சதவீதம் மானியத்தில உரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் ஊக்கம் பெற்று, கூடுதல் பரப்பில் குறுவை சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்