விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பி.ஏ.பி.பாசன திட்ட நீர் வினியோகத்தில் முறைகேடு, தண்ணீர் திருட்டு ஆகியவற்றை கண்டித்தும், கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வலியுறுத்தியும், உடுமலையில் பி.ஏ.பி.அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

Update: 2021-08-15 13:52 GMT
உடுமலை
பி.ஏ.பி.பாசன திட்ட நீர் வினியோகத்தில் முறைகேடு, தண்ணீர் திருட்டு ஆகியவற்றை கண்டித்தும், கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வலியுறுத்தியும், உடுமலையில் பி.ஏ.பி.அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பி.ஏ.பி.பாசன திட்டம்
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத்திட்டத்தில்  திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த  3லட்சத்து 77ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 6 மாதங்கள் ஒரு மண்டலம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 4வது மண்டல பாசனத்திற்கான தண்ணீர் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து சென்று கொண்டுள்ளது. இந்த பாசன திட்டத்தில் பி.ஏ.பி.வாய்க்காலில் இருந்து தண்ணீரை திருடுவதாகவும், அதனால் கடைமடைக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை என்றும், அதை பொதுப்பணித்துறை  அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும், பாசனநீர் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இத்தகைய போக்கை கண்டித்தும், பாசனநீர் விநியோகத்தில் முறைகேடுகளை போக்கி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, கணிமவளத்துறைஉள்ளிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்குபெறும் வகையிலான கூட்டத்திற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கோரியும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பி.ஏ.பி.விவசாயிகள் நல சங்கம், ஆனைமலையாறு-நல்லாறு போராட்டக்குழு, திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் வட்டமலை ஓடைக்கரை அணை பாசன விவசாயிகள் சங்கம் ஆகிய சங்கங்கள் அறிவித்திருந்தன.
காத்திருப்பு போராட்டம்
அதன்படி இந்த சங்கங்களைச்சேர்ந்த விவசாயிகள் நேற்று  உடுமலை பி.ஏ.பி.செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், காத்திருப்புபோராட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோரது படங்களை கைகளில் பிடித்தபடி அலுவலக வளாக நுழைவு வாயில் முன்பு சாலைப்பகுதியில் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள பி.ஏ.பி.திட்ட பாசன பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் உடுமலை தாசில்தார் வி.ராமலிங்கம் பி.ஏ.பி.பாசன திட்ட திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் கோபி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் சப்இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முறைகேடு
அப்போது விவசாயிகள் கூறியதாவது
தற்போது பி.ஏ.பி.பாசன திட்ட நீர் விநியோக முறையில் குறைபாடுகள் உள்ளன.மட்டை மில் அதிபர்களும், கோழிப்பண்ணை அதிபர்களும் ஏக்கர் கணக்கில் பிரமாண்டமான தொட்டிகளை அமைத்து முறைகேடாக, பி.ஏ.பி.பிரதான கால்வாயில் இருந்து தண்ணீரை திருடி பதுக்கி வைத்துள்ளனர்.தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறையினர்
தண்ணீர் திருட்டுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் புஞ்சை சாகுபடிக்கு ஏற்றவாறு தண்ணீர் விடுவதில்லை. அதனால் பி.ஏ.பி.தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பயிர்கள் சாகுபடி செய்த பிறகு தண்ணீர் இல்லாமல் காய்ந்து விடுவதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.தண்ணீர் அனைவருக்கும் பொதுவானது.அதை திருடி பதுக்கி வைக்கக்கூடாது.தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டியது அவசியம்.
பி.ஏ.பி.சட்ட விதிகளின் படி மட்டுமே தண்ணீர் பட்ஜெட் தயார் செய்து உரிய நேரத்தில் காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 1150கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்குதண்ணீர் எடுத்து 14நாட்களுக்கு ஒரு சுற்று என 135 நாட்கள் கால அளவு என்றபடி புன்செய் பயிர் சாகுபடிக்கு ஏற்ப பாசனநீரை வினியோகம் செய்ய வேண்டும்.
பாசனநீர் விநியோகத்தில் குறைபாடுகள்மற்றும் முறைகேடுகளை போக்கவேண்டும்.
இவ்வாறு  விவசாயசங்கங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், இதற்காக கலெக்டர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கூட்டத்திற்கு ஏற்பாடு
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேசும்போது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசிவிட்டு எந்த தேதியில் கூட்டம் நடத்தப்படும்என்பது குறித்த தகவல் வருகிற 18ம்தேதிக்குள் விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

---
உடுமலை பி.ஏ.பி.அலுவலகம் முன்பு
காந்தி, காமராஜர் உருவப்படங்களுடன், விவசாயிகள்காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்
-------------------
உடுமலை பி.ஏ.பி.அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்
-----------------------
Image1 File Name : 5688101.jpg
---
Image2 File Name : 5688102.jpg
----
Reporter : A. Stephen  Location : Tirupur - Udumalaipet - Udumalai

மேலும் செய்திகள்