கடைவீதிகளில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

கடைவீதிகளில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

Update: 2021-08-15 13:31 GMT
திருப்பூர்
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளாகும். அன்றைய தினம் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் கூடுவது வழக்கம். பெண் தொழிலாளர்கள் பேன்சி உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் பழைய பஸ் நிலையம் புதுமார்க்கெட் வீதிக்கு படையெடுப்பார்கள். கொரோனா பரவல் காரணமாக திருப்பூர் மாநகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம், மாநகராட்சி சந்திப்பு பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதியில்லை.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிலாளர்கள் கடைவீதிகளுக்கு வந்தனர். கடைகள் திறக்கப்படாவிட்டாலும் கூட, ரோட்டோரம் தற்காலிக பேன்சி கடைகள், துணிக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெண்கள் வாங்கி சென்றார்கள். இதன்காரணமாக புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு, பார்க் ரோடு, காமராஜர் ரோடு, பழைய பஸ் நிலையம் பகுதிகளில் இளைஞர், இளம்பெண் தொழிலாளர்கள் அதிகமாக காணப்பட்டனர்.
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரே ரோட்டோரம் தற்காலிக கடைகளை அமைத்து பனியன் விற்பனை நடைபெற்றது. காதர்பேட்டையில் பனியன் விற்பனை கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் ரோட்டோரம் உள்ள கடைகளில் பனியன் வாங்க அதிக அளவில் குவிந்தனர். அதுபோல் ரெயில் நிலையம் பகுதியிலும் தொழிலாளர்கள் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்தது.

மேலும் செய்திகள்