இயற்கை முறையில் பல அடுக்கு சாகுபடி
உடுமலை அருகே இயற்கை முறையில் பல அடுக்கு சாகுபடி மேற்கொண்டு வரும்விவசாயி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதிலும் அசத்தி வருகிறார்.
போடிப்பட்டி
உடுமலை அருகே இயற்கை முறையில் பல அடுக்கு சாகுபடி மேற்கொண்டு வரும்விவசாயி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதிலும் அசத்தி வருகிறார்.
இயற்கை சாகுபடி
உடுமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியிலுள்ள விவசாயி ஜெகதீஷின் தோட்டத்துக்குள் நுழையும் போது கேரள மாநிலத்தின் குளிர்ந்த தோட்டப்பகுதிக்குள் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் கோகோ, ஜாதிக்காய், முள் சீத்தா, தென்னை மரங்களில் படர்ந்துள்ள மிளகுக்கொடிகள் என்று பல அடுக்குப்பயிர்களை சாகுபடி செய்துள்ளார். அத்துடன் இவை அனைத்தும் முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிரிட்டு அசத்தி வருகிறார்.
இதுதவிர நாவல், அத்தி போன்ற பயிர்களையும் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து விவசாயி ஜெகதீஷ் கூறியதாவது
ஒளிச்சேர்க்கை
ரசாயனங்கள் இல்லாமல் கூடுதல் மகசூல் பெறமுடியாது என்ற தவறான புரிதல் பல விவசாயிகளிடம்உள்ளது. இது நிச்சயமாகதவறான கருத்து என்பதை அனுபவபூர்வமாக நிரூபித்துள்ளோம். பொதுவாக பயிர்களின் வேர்தான் பயிர்களுக்கு உணவளிக்கிறது என்ற எண்ணத்தில் பலவிதமான ரசாயன உரங்கள் மற்றும் ஊட்டங்களை பயிர்களுக்கு அளித்து வருகிறார்கள். ஆனால் இலைகள் தான் வேருக்கும் சேர்த்து உணவளிக்கிறது என்பது இயற்கை விவசாயம் சொல்லும் பாடமாகும். இலைகள் மூலம் நடைபெறும் ஒளிச்சேர்க்கையே பல சத்துக்களை பயிர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. மேலும் மண்ணில் விழும் காய்ந்த இலை, தழை போன்ற கழிவுகளே மக்கி பயிருக்கு உரமாகிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக மரங்களுக்கிடையில் தேனீப்பெட்டிகளை வைத்து பராமரிக்கிறோம்.
ஈரப்பதம்
தற்போது தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ள கோகோவிலிருந்து உதிரும் இலைகள் மற்றும் தென்னையிலுள்ள மட்டைகள், ஓலைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் மரங்களுக்கடியிலேயே போட்டு வைக்கிறோம். இவைமண்ணுக்கு மூடாக்காக செயல்பட்டு ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. மேலும் மண்ணுடன் மக்கி நைட்ரஜனை பயிர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் ஈரப்பதத்தால் மண்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மண்ணுக்குத் தேவையான காற்றோட்டம், உரம் போன்றவற்றை வழங்குகிறது.
இதுதவிர வீட்டில் வளர்க்கும் மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல் போன்றவற்றைஉற்பத்தி செய்து சொட்டுநீர்ப்பாசனம் மூலம் பயிர்களுக்கு வழங்குகிறோம். இவற்றின் உற்பத்தியின்போது கிடைக்கும் கழிவுகளிலிருந்துமண்புழு உரம் உற்பத்தி செய்கிறோம். இதனால் உரங்களுக்கான செலவு குறைவதுடன் அதிக மகசூலும் கிடைக்கிறது. பல அடுக்கு சாகுபடி முறையால் பல மடங்கு வருமானம் பெற முடிகிறது.
கூடுதல் வருவாய்
விவசாயியாக மட்டுமல்லாமல் வியாபாரியாகவும் மாறும்போது இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு நமக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அத்துடன் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.