கோத்தகிரி அருகே நடைபாதை பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கோத்தகிரி அருகே நடைபாதை பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓரசோலையில் பூபதி நகர் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குன்னூர்-ஊட்டிக்கு சாலையில் இருந்து தாழ்வான பகுதியில் உள்ள அந்த கிராமத்திற்கு ஊராட்சி சார்பில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் செங்குத்தாக உள்ளதால் அந்த சாலை வழியாக நடந்து செல்ல சிரமமாக இருந்தது. குறிப்பாக நோயாளிகள் மற்றும் இறந்தவர்களை சுமந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கிராம மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இதற்கிடையில் அந்த நிலத்தை சுற்றிலும் பாதுகாப்புச்சுவர் கட்டும் பணியை உரிமையாளர் தொடங்கினார். இதை அறிந்த கிராம மக்கள் நேற்று காலை 11 மணியளவில் திரண்டு வந்தனர். பின்னர் பாதுகாப்புச்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி அந்த நிலத்தை நடைபாதைக்கு பயன்படுத்த கையகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி குன்னூர்-ஊட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் தீபக், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுடன், கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நடைபாதை பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது, அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரை அழைத்து பேசி நடைபாதை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.
மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.