சீகூர் வனப்பகுதியில் சக யானைகளுடன் பழக தொடங்கிய ‘ரிவால்டோ’ யானை
சீகூர் வனப்பகுதியில் சக யானைகளுடன் ‘ரிவால்டோ’ யானை பழக தொடங்கி உள்ளது. அதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத்தோட்டம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டுயானை சுற்றி வந்தது. மேலும் அந்த யானைக்கு சுவாச பிரச்சினை இருந்தது. இதற்கு சிகிச்சை அளிக்க கடந்த மே மாதம் அந்த யானையை வனத்துறையினர் பிடித்து, வாழைத்தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து அடைத்தனர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 2-ந் தேதி சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனத்தில் ரிவால்டோ யானை விடுவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த யானை மசினகுடி வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பியது.
இதைத்தொடர்ந்து ரிவால்டோ யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் யானை வனப்பகுதியிலேயே நிற்கிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள சக காட்டுயானைகளுடன் நெருங்கி பழகி வருகிறது.
கடந்த சில நாட்களாக சீகூர் வனப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் ரிவால்டோ யானை முகாமிட்டு, தனக்கு தேவையான பசுந்தழைகளை சேகரித்து விரும்பி சாப்பிட்டு வருகிறது. மேலும் ஆற்றில் இறங்கி குளித்து வருகிறது. இதை வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- சுற்றுலா பயணிகளை கவருவதற்காக சிலர் ரிவால்டோ காட்டு யானைக்கு உணவு அளித்து வந்தனர். இதனால் அது ஊருக்குள் முகாமிட்டு வந்தது. தற்போது மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் வாழக்கூடிய இயல்பான தன்மையை பெற்றுள்ளது.
அதை உணர்த்தும் வகையில் சக காட்டுயானைகள் ரிவால்டோ யானையிடம் நெருங்கி பழகி வருகிறது. ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.