ஏ.டி.எம். எந்திரத்தில் தானாக வந்த ரூ.10 ஆயிரம்
ஓமலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் தானாக வந்த ரூ.10 ஆயிரத்தை சுங்கச்சாவடி ஊழியர் வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவரை பொதுமக்கள் பாராட்டினர்.
ஓமலூர், ஆக.15-
ஓமலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் தானாக வந்த ரூ.10 ஆயிரத்தை சுங்கச்சாவடி ஊழியர் வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவரை பொதுமக்கள் பாராட்டினர்.
சுங்கச்சாவடி ஊழியர்
ஓமலூர் அடுத்த கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 42). இவர் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தொட்டி அருகே உள்ள சுங்கச்சாவடியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 10.30 மணி அளவில் தனது அத்தியாவசிய தேவைக்காக ஓமலூர்-மேட்டூர் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.
அங்கு பணம் போடவும், எடுக்கவும் வசதி கொண்ட ஒரு ஏ.டி.எம். எந்திரம் மற்றும் பணம் எடுக்க மட்டும் பயன்படுத்தும் ஏ.டி.எம். எந்திரம் என 2 எந்திரங்கள் இருந்தன. அதில் பணம் போடவும், எடுக்கவும் வசதி கொண்ட எந்திரத்தில் அவர் தனது ஏ.டி.எம். கார்டை சொருகினார். பின்னர் அவர் ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தும் முன்பே அந்த கார்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கி கொண்டது.
தானாக வந்த பணம்
அதே நேரத்தில் அருகே உள்ள எந்திரத்தில் இருந்து பணம் எண்ணும் சத்தம் கேட்டது. பின்னர் பக்கத்து எந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் தானாக வந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்ட பாலசுப்பிரமணியம், தனது கார்டு ஏ.டி.எம்.மில் சிக்கி கொண்டது குறித்தும், பக்கத்து ஏ.டி.எம். எந்திரத்தில் வேறு யாருடைய பணமோ ரூ.10 ஆயிரம் தானாக வெளியே வந்துள்ளது குறித்தும் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த பணத்தை திங்கட்கிழமை வங்கியில் ெசலுத்துமாறு பாலசுப்பிரமணியத்திடம் மேலாளர் செல்ேபானில் கூறினார். அதே நேரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கி கொண்ட கார்டை வங்கி ஊழியர் ஒருவர் அந்த மையத்துக்கு சிறிது நேரத்தில் வந்து எடுத்து கொடுத்தார். இதையடுத்து பாலசுப்பிரமணியம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தனது கார்டு ஏ.டி.எம்.மில் சிக்கி கொண்ட நிலையில், வேறு ஒருவரின் ரூ.10 ஆயிரம் வந்ததை எடுத்து வங்கியில் ஒப்படைக்க முயற்சி எடுத்த சுங்கச்சாவடி ஊழியருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.