பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.;
பவானிசாகர்
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
குடிநீர் வினியோகம்
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தயிர்பள்ளம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு கொத்தமங்கலம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் கூட்டுக்குடிநீர் திட்ட மின்மோட்டார் இயக்க முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதன் காரணமாக தயிர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், சத்தியமங்கலம்-கொத்தமங்கலம் சாலையில் தயிர் பள்ளம் பஸ்நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, பாவேசு, பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பு மற்றும் மின்தடை காரணமாக 2 நாட்கள் குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. எனவே உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த போராட்டம் காரணமாக சத்தியமங்கலம்-கொத்தமங்கலம் சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.