வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து
தமிழக வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஈரோடு
தமிழக வேளாண்மை பட்ஜெட் குறித்து ஈரோடு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்பு
தமிழ்நாட்டில் முதன் முதலாக விவசாயத்துக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட்டினை வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இது பற்றி ஈரோடு மாவட்ட விவசாயிகள் வரவேற்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதி சிவசுப்பிரமணி கூறியதாவது:-
வேளாண்மைத்துறைக்கு பட்ஜெட் என்ற நடவடிக்கையே வரவேற்கத்தக்கது. மேலும், இந்த பட்ஜெட் புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் அறிவித்தது இன்னும் பாராட்டுக்கு உரியது. இந்த பட்ஜெட்டில் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஈரோடு விவசாயிகளுக்கு இன்னும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கர்நாடக மாநில விவசாயிகளுக்கும் இது பயனுள்ளதாக அமையும். நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் பெயரில் திட்டங்கள் தீட்டப்பட்டு இருப்பது விவசாயத்துக்காக வாழ்ந்தவர்களுக்கு மரியாதை செய்வதாக உள்ளது. மக்கள் இயற்கை விவசாயம் நோக்கி தங்கள் பார்வையை திருப்பும் இந்த நேரத்தில் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து இருப்பது சிறப்புக்கு உரியது.
பனைமரங்களை பாதுகாக்கவும், கருப்பட்டியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதும் பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்முனை மின்சாரம்
தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் கூறியதாவது:-
தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ததை உழவர்கள் மகிழ்ந்து வரவேற்கிறோம். 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு பட்ஜெட்டை சமர்ப்பித்ததன் மூலம் தமிழக அரசின் கொள்கை நிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ.150 வழங்குவது மகிழ்ச்சிக்கு உரியது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் நெல் உற்பத்தியை காப்பாற்ற நெல் பயிருக்கான பொருளாதாரம் மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
பயிர் காப்பீட்டுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பு மானியத்தை குறைத்த நிலையில் தமிழக அரசு தனது பங்கை உயர்த்தி வழங்கி விவசாயிகளை காப்பீட்டு திட்டத்துக்குள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. பட்ஜெட்டில் வேளாண் பயிர்கள் தள்ளுபடியில் போதுமான விளக்கம் இல்லை. பயிர்க்கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயத்தில் மிக முக்கியமானவை நிதி ஆதாரம், தண்ணீருக்கான மின்சார வசதி. எனவே விவசாயத்துக்கு மின் கட்டணம் செலுத்துவதில் அக்கறை செலுத்தி இருப்பது போன்று, மும்முனை மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது:-
விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்த தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் விவசாயிகள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறோம். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 60 வழங்குவது, கரும்பு டன்னுக்கு ரூ.150 வழங்குவது ஆகியவை மகிழ்ச்சிக்கு உரியது. காப்பீட்டு பங்குத்தொகை உயர்த்தி இருப்பது வரவேற்புக்கு உரியது. பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதை வரவேற்கிறோம். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வேளாண்மை திட்டங்கள் உள்பட இந்த வேளாண்மை பட்ஜெட் மிகவும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை ஏற்பு
சிறு-குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் கொண்டு வந்துள்ளது. இதை சிறு, குறு விவசாயிகளாகிய நாங்கள் வரவேற்கிறோம். இதேபோன்று பட்ஜெட்டில், வட்டார அளவில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும், ஒவ்வொரு கிராமமும் வேளாண் தொழில் சிறப்பாக வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும். பனை மரத்தை வெட்டுவதற்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அந்த கோரிக்கையை அரசு ஏற்றுகொண்டு உள்ளது. மேலும் பனை மரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுப்பதாக கூறி உள்ளது. தற்போது கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.150 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வாங்க விலை உயர்த்தி தரப்படுவதாக அறிவித்து உள்ளனர். காய்கறி பயிர் மற்றும் பயிர் வகை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் மற்றும் அதற்கு தேவையான உரங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.