பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழும்; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆரூடம்
பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மாநில அரசின் பொறுப்பு
மாநிலத்தில் கொரோனா 3-வது அலை உருவாவதை தடுப்பது அரசின் கடமையாகும். அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதில் இருந்தே அரசு எடுக்க வேண்டும். கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் குறையவில்லை. அந்த மாநிலத்தையொட்டி உள்ள நமது மாநில மாவட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து வருபவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.
குறிப்பாக குடகு, தட்சின கன்னடா, மைசூரு மற்றும் பிற மாவட்ட எல்லை பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அதில், அலட்சியம் காட்டக்கூடாது. மாநிலத்தில் 3-வது அலை உருவாகாமல் தடுத்து, மக்களை அதன் பாதிப்பில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். 3-வது அலை உருவாகாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
அரசு கவிழும்
இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு எக்காரணத்தை கொண்டும், அரசு அனுமதி அளிக்க கூடாது. இந்த ஆண்டு திருவிழாக்கள், பிற விழாக்களை நடத்தாமல் இருப்பது நல்லது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட விரும்புவோர், தங்களது வீட்டிலேயே சிலையை வைத்து வழிபட வேண்டும். பா.ஜனதாவினர் எதற்கெடுத்தாலும் அரசியல் செய்கிறார்கள். அவர்களை ஆட்சியில் இருந்து மக்கள் விரட்டுவார்கள். பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்த பின்பு, அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகிறார்.
மந்திரிசபை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை, எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இருப்பதை நேரடியாக பார்க்கிறோம். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும். இதனை நான் சொல்லவில்லை. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே, அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் பசவராஜ் பொம்மை அரசு நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்காது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.