திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை

பேராவூரணி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-08-14 20:53 GMT
பராவூரணி;
பேராவூரணி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். விருந்துக்கு அழைத்துச்சென்று தீர்த்துக்கட்டிய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- 
திருமணம்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருைடய மனைவி காந்தி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் ஜோதிக்கும் (வயது 19), பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த மணிகண்ட பிரபுவுக்கும்(35) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு மணிகண்டபிரபு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். திருமணத்துக்கு பின்னர் ஜோதி தனது கணவர் மணிகண்டனுடன் பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். 
விருந்துக்கு சென்றனர்
நேற்று முன்தினம் ஜோதியின் உறவினரான ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் வீட்டுக்கு கணவன்-மனைவி இருவரும் வந்தனர். அங்கு உள்ள கோவிலில் நேற்று அதிகாலை கிடா வெட்டு பூஜை நடந்தது. 
கிடா விருந்து தயாரான நிலையில் ஜோதியும் அவரது கணவர் மணிகண்டபிரபுவும் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். 
அடித்துக்கொலை
ஆனால் மணிகண்டபிரபு சிவன் கோவிலுக்கு செல்லாமல் வேறு வழியே ஊமத்தநாடு ஏரிக்கரை வழியாக பேராவூரணிக்கு சென்றார். இதனால் ஜோதி கோவிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள்? என தனது கணவரிடம் கேட்டுள்ளார். 
அப்போது வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய மணிகண்டபிரபு அங்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வெட்டி அடுக்கி வைத்திருந்த கருவேல மரக்கட்டையை எடுத்து ஜோதியின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில்  சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து மணிகண்டபிரபு தப்பிச்சென்று விட்டார். 
போலீசார் விசாரணை 
இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் வசந்தா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 
போலீசில் சரண்
இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை அவரது கணவர் மணிகண்டபிரபு மட்டும் கொலை செய்தாரா?  அல்லது இந்த கொலையில் யாருக்கும் தொடர்பு உள்ளதா?  ஜோதி கொலைக்கான காரணம் என்ன?  என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் மணிகண்டபிரபுவை தீவிரமாக தேடினர். இந்த நிலையில் மணிகண்ட பிரபு  பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிடா விருந்துக்கு அழைத்துச்சென்று புதுப்பெண்ணை அவரது கணவரே அடித்துக்கொன்ற சம்பவம் பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்