கலெக்டர் அலுவலகத்தில் இயக்குனர் கவுதமன் தர்ணா
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயக்குனர் கவுதமன் தர்ணாவில் ஈடுபட்டார்.
தாமரைக்குளம்:
தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தார். அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால், அவர் கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அதிகாரியிடம் மனு அளித்தார். அதில், சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வேளாண் பட்ஜெட்டில் பனை மரத்தை காப்பதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, என்றார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அவர் மனு அளித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது நவீன விதமான கட்டணக் கொள்ளை ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும். பேரளி சுங்கச் சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழ்நாட்டில், தமிழருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை எனச் சட்டம் கொண்டு வர வேண்டும், என்றார்.