தடுப்பூசி போடுவதில் முறைகேடு செய்வதாக புகார்:
கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு செய்வதாக வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு செய்வதாக வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் காலை 8 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு 600 தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதற்கிடையில் பலகையில் எழுதப்பட்டு இருந்ததை அங்கிருந்த ஊழியர்கள் அழித்ததாக தெரிகிறது. மேலும் தடுப்பூசிகள் போடவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் அங்கு வந்து ஆரம்ப சுகாதார நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தடுப்பூசி
இதுகுறித்து பா.ஜனதாவினர் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு 600 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி காமாட்சி நகர், வடுகபாளையம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 300 தடுப்பூசிகள் போட வேண்டும். ஆனால் அதிகாரிகள் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதால் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றனர்.
ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.