பள்ளிபாளையம் அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த மகன் கைது
பள்ளிபாளையத்தில் விவசாயியை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்:
விவசாயி கொலை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெள்ளிகுட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 71). விவசாயி. இவர் அங்குள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் அங்கு ஆடுகளையும் வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி காளியப்பன் மர்மமான முறையில் குடிசையில் இறந்து கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
பள்ளிபாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மசாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனையின் போது காளியப்பன் உடலில் காயங்கள் இருந்தது தெரிந்தது. மேலும் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
இதையடுத்து போலீசார் மர்மசாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் அவர் வசித்து வந்த கொட்டகை பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காளியப்பனின் மகன் சோமசுந்தரத்திடமும் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் தனது தந்தை காளியப்பனை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கைது
மேலும், கடந்த 4-ந் தேதி கொட்டகையில் இருந்த காளியப்பனிடம் சோமசுந்தரம் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆட்டு வியாபாரியான கேசவன் (42) என்பவருடன் சேர்ந்து, காளியப்பனை கட்டையால் அடித்துக்கொலை செய்ததும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு, ஊருக்கு வந்து ஒன்றும் தெரியாததுபோல் நாடக மாடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆட்டு வியாபாரி கேசவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.