செரியலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் அதிகம் இருந்தது. ஆனால் தற்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், நீர் வழிப்பாதைகள் காணாமல் போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதனால் மீண்டும் நீர்நிலைகளில் தண்ணீரை தேக்க நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மறமடக்கி, சேந்தன்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் இளைஞர்களும், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து சொந்த செலவில் நீர்நிலைகளை சீரமைத்தனர். ஆனால் நீர்வரத்து வாரிகள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துவிட்டதால் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரக்கோரி விவசாயிகள் இளைஞர்கள் பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணைய வழியில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலர் கோரிக்கை மனு கொடுத்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் பலர் இணைந்து செரியலூர் இனாம், ஜெமின் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நீர்வழிப்பாதை, அம்புலி ஆறு ஆக்கிரமிப்புகள், அரசு நிலம், கோவில் நிலம், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி செரியலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்வேந்தன், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோரிடம் மனு கொடுத்தனர். மேலும் வருவாய்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் செரியலூர் கிராமத்தில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பு நிலங்களின் வகை, சர்வே எண்கள், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் உள்பட அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.