ஆலங்குடியில் பரபரப்பு காதல் திருமணம் செய்தவர் திடீர் சாவு உடலை வீட்டின் முன்பு வைத்த நண்பர்கள்; பெற்றோர் வாங்க மறுப்பு

ஆலங்குடியில் காதல் திருமணம் செய்தவர் திடீரென இறந்ததால், அவரது உடலை பெற்றோர் வீட்டின் முன்பு நண்பர்கள் வைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-14 19:34 GMT
ஆலங்குடி
பெற்றோர் எதிர்ப்பு 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மதம் மாறியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 
வீட்டு வாசலில் உடல்
இந்நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. சில வருடங்கள் கழித்து அவர் திருச்செங்கோட்டில் ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு வந்தவரை, பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் நண்பர்களுடன் தூத்துக்குடி சென்றுள்ளார். அங்கு திடீரென உடல்நிலை மோசமாகி அவர் இறந்து விட்டார். இதையடுத்து நண்பர்கள் அவரது உடலை ஆலங்குடி கொண்டுவந்து அவரது பெற்றோர் வீட்டு முன் வைத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியேறினர். ஆனால் உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. 
அடக்கம் செய்யப்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது முதல் மனைவி, தனது குழந்தைகளுடன் வந்து எனது கணவரின் உடலை வீட்டிற்குள் வைத்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஜமாத்தார்களிடம் பேசினர். 
முடிவில் ஜமாத்தார்கள் இறந்தவரின் உடலை ஆலங்குடி மையத்தாங்கரைக்கு கொண்டு சென்று அங்கு முறைப்படி அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்