ரேஷன் கடைகளில் பனைவெல்லம் கருப்பட்டி வழங்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது

தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி வழங்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.;

Update: 2021-08-14 18:32 GMT
திருப்பூர்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரேஷன்  கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி வழங்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வரவேற்புக்குரியது
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன்:-
வேளாண்மை பட்ஜெட்டில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் போன்ற அறிவிப்புகள் உள்ளது வரவேற்புக்குரியது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 
தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்டு வரும் ரசாயன உர நிறுவனங்களை கட்டுப்படுத்தவும், பயோ பெர்டிலைசர் என்ற பெயரில் அதிக விலையில் தரமற்ற உரங்களை விற்பனை செய்யும் நிலையை மாற்றி அவற்றை ஒழுங்குபடுத்தும் திட்டம் அவசியமாகும். தரிசுநில மேம்பாட்டுத்திட்டம் வரவேற்புக்குரியது. அதேநேரத்தில் நிலமற்ற ஏழைகளிடம் தரிசு நிலங்களை வழங்கி மேம்படுத்த வேண்டும்.
 கண்காணிக்க வேண்டும்
மடத்துக்குளம் விவசாயி அழகுசுந்தரி:-
கரும்புக்கு டன்னுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை. கூலி, இடுபொருட்கள் செலவு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்சம் ரூ.500 உயர்த்தியிருக்க வேண்டும். அரசு அறிவித்த விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும். வியாபாரிகள் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும். 
மடத்துக்குளத்தில் உழவர் சந்தைக்கு என்று இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. விவசாயிகள் இலவச மின்சாரத்துக்கு ரூ.4,508 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தால் நல்லது.
பனைவெல்லம், கருப்பட்டி
 புஞ்சை தாமரைக்குளம் தனசேகரன்:-
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கரும்பு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் விலை ரூ.2,750 லிருந்து ரூ.2 ஆயிரத்து 900 மாக அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான ரேஷன் கடைகளில் பனைவெல்லம், கருப்பட்டி வழங்க நடவடிக்கை எடுத்து இருப்பது  வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சருக்கு நன்றி.
புலிப்பார் கிராமம் ரவிக்குமார்:-
திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத மானியம் அல்லது ரூ.2 லட்சம் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் 3  ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார், பம்பு செட்டுகள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
முருங்கைக்காய் மண்டலம்
வெள்ளகோவில் வேளகவுண்டன்பாளையம் விவசாயி கதிர்வேல்:-  வெள்ளகோவில், புதுப்பை, மூலனூர் ஆகிய பகுதிகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இப்பகுதியில் நீர்வளம் குறைவாக இருப்பதால் அதிகப்படியாக முருங்கை பயிரிடுகின்றனர். வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை அன்றும் புதுப்பையில் தினசரியும் முருங்கைக்காய் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் அருகில் உள்ள கொள்முதல் மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
 முருங்கை வியாபாரிகள் கேட்கும் விலைக்கு தான் விவசாயிகள் விற்ப பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது வேளாண்மை பட்ஜெட்டில் இப்பகுதியை முருங்கைக்காய் மண்டலமாக அறிவித்துள்ளதால் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எங்கள் பகுதியில் முருங்கைக்காய் தொழிற்சாலை அமைய வாய்ப்புள்ளது. எங்களது முருங்கைக்காய்க்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்