40 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்
தளி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த 40 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தளி
தளி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த 40 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கலப்பட டீத்தூள்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தளி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர். அவர்கள் பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, குறிச்சிக்கோட்டையில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கலப்பட டீத்தூள் பயன்பாட்டில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பறிமுதல்
அதில் குறிச்சிக்கோட்டையில் உள்ள கடையில் இருந்து டீ தூள் வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து குறிச்சிக்கோட்டை பகுதிக்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள கடையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை ஆய்வகத்திற்கு பரிசோதனை செய்வதற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவு வந்த பிறகு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் 12 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். மேலும் செயற்கை வண்ணம் கலந்த டீத்தூள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கோடீஸ்வரன், விஜயராஜா, பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.