பயணிகளை அச்சுறுத்தி உருட்டுகட்டையுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி உருட்டுக்கட்டையுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. வாலிபரின் ரகளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
திருவண்ணாமலை,
ஆன்மிக நகரமான திருண்ணாமலை நகருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இவர்கள் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் திருவண்ணாமலை நகர மத்திய பஸ் நிலையம் பயணிகள் கூட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் வேலூர் செல்லும் பஸ்கள் பகுதியில் தரையில் பழங்கள் வைத்து பெண் வியாபாரி ஒருவர் பழம் விற்று வந்தார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்தப் பெண் வியாபாரியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வாலிபர் கையில் உருட்டுக்கட்டையை எடுத்து கடையை அடித்து நொறுக்கினார். பஸ் நிலையத்தின் இருக்கைகளையும் உடைத்து ரகளையில் ஈடுபட்டார். அந்த வாலிபரின் ஆக்ரோஷமாக செயலை கண்டு பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள், குழந்தைகள் அலறியடித்து ஓடினர்.
அந்த வாலிபர் கிரிக்கெட் விளையாடுவது போல் உருட்டுக்கட்டையால் கூடையை உடைத்து பழங்களை நாசம் செய்தார். தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது தாயாருடன் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். பெங்களூருவில் மனநல சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தனது ஊருக்கு செல்ல பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது பெண் வியாபாரியிடம் தகராறு செய்துள்ளார்.
பின்னர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரின் தாயார், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது.
திருவண்ணாமலை நகரில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, கஞ்சா அடித்து விட்டு இரவில் மர்மநபர்கள் டீ வியாபாரம் செய்யும் நபர்களை மிரட்டி வருகின்றனர். எனவே, இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
வாலிபர் ரகளையில் ஈடுபட்டபோது அருகில் போலீசார் நின்றிருந்து வேடிக்கை பார்த்ததாகவும், அவர்கள் நினைத்திருந்தால் அந்த வாலிபரை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். அருகில் புறக்காவல் நிலையம் இருந்தும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.