பி.ஏ.பி.அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா
கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி.தண்ணீர் வராததால் உடுமலையில் பி.ஏ.பி.அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
உடுமலை
கடைமடை பகுதிக்கு பி.ஏ.பி.தண்ணீர் வராததால் உடுமலையில் பி.ஏ.பி.அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பி.ஏ.பி.தண்ணீர்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பி.ஏ.பி. உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கு உள்ள பகிர்மான கால்வாயின் மடைகள் திறக்கப்பட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
இந்த நிலையில் உடுமலையை அடுத்துள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த சிலரது தோட்டங்களுக்கு சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடை எண் 38 (இடது) லிருந்து வரும் தண்ணீரை பாய்க்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் கடைமடையில் உள்ள இவர்களது தோட்டத்திற்கு அருகில் இருப்பவர்கள், இந்த மடைக்கு அருகில் உள்ள வரப்பை உடைத்து தண்ணீரை, அவர்களது தோட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் என்று பி.ஏ.பி.பொதுப்பணித்துறை இளம் பொறியாளரிடம் அருள்ஜோதி புகார் செய்திருந்தார்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் தங்களது தோட்டத்திற்கு, மடையில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெண்கள் நேற்று உடுமலை சர்தார் வீதியில் உள்ள பி.ஏ.பி.அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும், சிறு குறு விவசாயிகளை காப்பாற்றுங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் பிடித்தபடி பி.ஏ.பி.அலுவலக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் உடுமலை துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர்ராஜாகண்ணன்,
சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அங்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பி.ஏ.பி.உதவிப்பொறியாளர் அலுவலகத்திலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து உதவிப்பொறியாளர்அந்த மடைபகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு திரும்பி வந்தார். அவர்வந்ததும், அந்த பெண்களிடம் பேசும்போது கடைமடையில் உள்ள தங்களது பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.