நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-14 17:16 GMT
நாகப்பட்டினம்:
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று திடீரென நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
போலீஸ் குவிப்பு
தகவலின் பேரில் நாகை நம்பியார் நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தடுத்து நிறுத்தவும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை கடலில் தடுத்து நிறுத்துவதற்காக நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நாகை துறைமுகத்திற்கு வந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
 மீனவர்கள் வேலை நிறுத்தம்
இதையடுத்து நாகை துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று (நேற்று) முதல் வரும் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது. வரும் 20-ந்தேதிக்குள் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்திய மீனவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலெக்டர்களிடம் மனு
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாகை உள்ளிட்ட 3 மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று தொடங்கிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 ஆயிரத்து 500 விசைப்படகுகள், 7 ஆயிரம் பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.. இதனால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் செய்திகள்