கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு

கோட்டக்குப்பம் அருகே கல்லூரி மாணவியிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-08-14 17:10 GMT
விழுப்புரம், 

வானூர் தாலுகா எறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் விக்னேஷ் (வயது 19). இவர் புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தன்னுடன் படிக்கும் புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த திவ்யா (19) என்பவருடன் ஒரு காரில் கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் சென்றார். அங்குள்ள கடற்கரை அருகில் இருவரும் காரில் இருந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

நகை பறிப்பு

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், விக்னேசிடம் சென்று உன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து வரச்சொன்னார் என்று கூறி அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பெரியமுதலியார்சாவடியில் உள்ள ஒரு தங்கும் விடுதி முன்பு கீழே இறக்கி விட்டார். பின்னர் அந்த வாலிபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பொம்மையார்பாளையம் வந்து அங்கிருந்த திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே திவ்யா, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்