7 பேர் பலியான விபத்தில் லாரி டிரைவர் கைது

சந்தவாசல் அருகே லாரி-கார் மோதி 5 பெண்கள் உள்பட 7 பேர் பலியான விபத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-14 17:07 GMT
கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே நேற்று முன்தினம் நடந்த லாரி-கார் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் தனது தாய் கோமதியுடன் (விபத்தில் இறந்து விட்டார்) பயணம் செய்த சிறுவன் குமரன்(வயது 3½) மயிரிழையில் உயிர் தப்பினான்.

தாயை இழந்தது கூட தெரியாமல் அழுதபடி இருந்த சிறுவனை மீட்புப்பணியில் இருந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தூக்கி தோள் மீது சாய்த்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திய காட்சி வாட்ஸ்-அப்பில் பரவி பாராட்டை குவித்தது. 

சந்தவாசல் போலீஸ் நிலையத்துக்கு சிறுவன் குமரன் தனது தந்தை சுதாகருடன் வந்துபோது போலீசார் பால் வாங்கி வந்து குடிக்க வைத்து, அங்குள்ள மேஜை மீது தூங்க வைத்தது மனித நேயம் மறையவில்லை என்பதை உணர்த்தியது.

இந்த விபத்து தொடர்பாக, ஆரணி அருகே சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமநாதன் (வயது 56) என்பவரை சந்தவாசல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், விளாங்குப்பம் கிராமத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, சந்தவாசலில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தனியார் எடைமேடையில் எடை போட வந்தேன்.

அப்போது எதிரே வந்த கார் தறிகெட்டு ஓடி வந்து திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம் என்பதால் விபத்தை என்னால் தடுக்க முடியவில்லை என்றார்.

மேலும் செய்திகள்