வடமதுரை அருகே என்ஜின் கோளாறால் நடுவழியில் நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்
வடமதுரை அருகே என்ஜின் கோளாறால் வைகை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது.
வடமதுரை:
மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த ரெயில் புறப்பட்டது. வடமதுரை அருகே அந்த ரெயில் வந்தபோது திடீரென்று என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உடனே என்ஜின் கோளாறை சரிசெய்யும் பணியில் டிரைவர்கள் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு, சென்னை நோக்கி சென்றது.
இருப்பினும் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த பயணிகள் அவதியடைந்தனர். மேலும் வடமதுரை, அய்யலுார் பகுதிகளில் லெவல் கிராசிங்க்குகாக ரெயில்வே கேட்டுகள் அரை மணி நேரம் மூடப்பட்டதால், காலை நேரத்தில் அவசரமாக வேலைக்கு சென்ற வாகன ஓட்டிகள், ரெயில் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமமடைந்தனர்.