சித்தியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கட்டிட மேஸ்திரி

காட்பாடியில் சாப்பாடு இல்லை என்றதால் சித்தியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-14 16:15 GMT
காட்பாடி

காட்பாடியில் சாப்பாடு இல்லை என்றதால் சித்தியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட மேஸ்திரி

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த எல்.ஜி. புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 47). ராஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடியாத்தம் அருகே தனியாக வசித்து வருகிறார். 

கோவிந்தம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கோவிந்தம்மாளின் அக்கா வரலட்சுமி ரத்தினகிரியை அடுத்த கீழ் குப்பத்தில் வசித்து வருகிறார்.

அவரது மகன் சரவணன் (33). கட்டிட மேஸ்திரி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எல்.ஜி.புதூர் வந்த சரவணன், சித்தி கோவிந்தம்மாள் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

அம்மிக்கல்லை போட்டு கொலை

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த சரவணன் கோவிந்தம்மாளிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அவர் சாப்பாடு இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஆத்திரமடைந்த சரவணன் வீட்டிற்கு வெளியே இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து கோவிந்தம்மாள் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனைக்கண்ட கோவிந்தம்மாளின் மகள் கத்தி கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கோவிந்தம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டிட மேஸ்திரி கைது

அங்கிருந்த கட்டிட மேஸ்திரி சரவணனனை பிடித்து வைத்துக்கொண்டு விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனை கைது செய்தனர். 

மேலும் அந்த பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோவிந்தம்மாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சித்தியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை செய்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்