பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு ‘சீல்’; கலெக்டர் எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் விற்பனைக்கு தடை விதி்க்கப்பட்டுள்ளது. இதனை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் விற்பனைக்கு தடை விதி்க்கப்பட்டுள்ளது. இதனை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீர் முழுமையாக கிடைக்கவும், குழாய்களில் பழுதுகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தவிர்க்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து கிராம பகுதிகளிலும் பசுமை வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும், அனைத்து கிராம சாலைகளை சீரமைத்து சீரான வழித்தடம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘சீல்’ வைக்கப்படும்
கடைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்த முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்தும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வீடுகளுக்கே சென்று குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உள்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.