குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு;

Update: 2021-08-14 15:49 GMT
கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தீக்குளிக்க முயற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் 12 மணியளவில் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் வந்தார். 

அங்கு அவர் திடீரென்று தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணைய்யை உடலில் ஊற்றிக்கொண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். 

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பெண் மற்றும் குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். 


விசாரணையில் அவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த ஜெஸ்டிஸ் என்பவரின் மனைவி வள்ளிமணி (வயது 28) என்பதும், அவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

வழக்கு பதிவு

இது குறித்து வள்ளிமணி ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் கூறியதாவது:-
கொரோனா காரணமாக வேலை இல்லாததால் அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவரிடம் கேட்டேன். ஆனால் அவர் உதவி செய்யாததால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தேன். 

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி தலைவர், தனியாக வந்து சந்திக்குமாறு என்னிடம் கூறினார். நான் எனது கணவரை அழைத்துக் கொண்டு வருவதாக கூறினேன். இதனால் அவர், என் கணவரை போலீஸ் மூலம் கைதுசெய்து சிறைக்கு அனுப்பி விடுவதாக கூறினார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வள்ளிமணி மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

ஆடியோ வைரல்

இதற்கிடையே வள்ளிமணி, ஊராட்சி தலைவரிடம் 2.31 நிமிடம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அதில் உன் வீட்டுக்காரர் யாரையோ அடித்து விட்டதாக சிலர் வந்து உள்ளனர். 

உன் கணவரை எங்கே என்று ஊராட்சி தலைவர்,  வள்ளிமணியிடம் கேட்கிறார். அதற்கு வள்ளிமணி எனது கணவர்  யாரை அடித்தார் என்று கேட்கிறார்.


அதற்கு ஊராட்சி தலைவர் சில பெயர்களை கூறியதும், அக்காள், தங்கை தானே போலீசில் புகார் அளிக்க சொல்லுங்கள் என்று வள்ளிமணி கூறுகிறார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்