பெங்களூருவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்து கோழிப்பண்ணையில் பதுக்கிய 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் முன்னாள் போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது

பெங்களூருவில் இருந்து தேனிக்கு கடத்தி வந்து கோழிப்பண்ணையில் பதுக்கிய 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-14 15:25 GMT
தேனி:

தேனி அருகே அரண்மனைப்புதூரில், பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த மூட்டையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், அரண்மனைபுதூரை சேர்ந்த கண்ணன் (வயது 27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்று சோதனையிட்டனர். அங்கு மேலும் 6 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. 
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், புகையிலை பொருட்களை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோழிப்பண்ணையில் பதுக்கல்
இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து பிடிபட்ட கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினார். எனினும் போலீசார் விடவில்லை. அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். 
இதில் புகையிலை பொருட்களை தேனியை சேர்ந்த நவரத்தினவேல் (40), பிரசன்னா (40) ஆகியோரிடம் இருந்து வாங்கியதாகவும், அவர்கள் 2 பேரும் மேலும் பல மூட்டைகளில் புகையிலை பொருட்களை ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்துள்ளதாகவும் போலீசாரிடம் கண்ணன் தெரிவித்தார்.
 4 பேர் கைது
இதையடுத்து ஒக்கரைப்பட்டிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சீனிவாசன் (50) என்பவரின் கோழிப்பண்ணையில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 
மொத்தம் 44 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன், நவரத்தினவேல், பிரசன்னா, சீனிவாசன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து அவற்றை கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்து சில்லரையில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய பிரசன்னாவின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 ரூ.10 லட்சம் மதிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகளில் சுமார் 1½ டன் புகையிலை பொருட்கள் இருந்தன. அதில் மொத்தம் 4 ஆயிரத்து 572 பாக்கெட்டுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட நவரத்தினவேல் மீது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. அவரும், பிரசன்னாவும் பள்ளிப்பருவ நண்பர்கள். பிரசன்னா, கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
 முன்னாள் போலீஸ்காரர்
கடந்த ஆண்டு தேனியில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வழக்கில் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. 
பின்னர் அவர், தனது நண்பருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்த நிலையில் மீண்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று நேரில் வந்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்வையிட்டார். பின்னர் 4 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்