காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-14 09:16 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாதம் இருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்படி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய புதிய கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை 7 மணி முதலே சிகிச்சைக்கு வரத்தொடங்கினர். மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு டாக்டர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சக்கர நாற்காலி, தாழ்வான படிக்கட்டுகள், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இதனையடுத்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், முகாமில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரெயில்வே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ரெயில்வே சாலையில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்