கடனை திருப்பிக்கேட்டதால் ஆத்திரம்: வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

கடனை திருப்பிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-14 04:23 GMT
பூந்தமல்லி,

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் வேம்புலி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). அதே பகுதி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (22). நண்பர்களான இவர்கள் இருவரும் லாரியில் இருந்து லோடு இறக்கும் வேலை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாஜியின் தாயார் சரசு, விபத்தில் சிக்கினார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவ செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் தரும்படி சதீசிடம் பாலாஜி கேட்டார்.

இதனால் சதீஷ், தனக்கு தெரிந்தவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை கடனாக வாங்கி கொடுத்தார். ஆனால் இதுவரை வாங்கிய பணத்தை பாலாஜி திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று மாலை போதையில் பாலாஜி வீட்டுக்கு சென்ற சதீஷ், அங்கிருந்த அவரது தாய் மற்றும் தந்தையிடம் தான் கொடுத்த கடனை திருப்பி தரும்படி கேட்டு தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பாலாஜி, வீட்டின் வெளியே அழைத்து வந்து சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.

அப்போது சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியை குத்த முயன்றார். சுதாரித்துக்கொண்ட பாலாஜி, அந்த கத்தியை பறித்து சதீசை குத்தினார். உடனே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் சிறிது தூரம் சாலையில் ஓட, ஓட விரட்டிச்சென்று கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்த மதுரவாயல் போலீசார், கொலையான சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷின் நண்பரான பாலாஜியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்