100 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சாவை சேலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-13 22:28 GMT
சேலம், ஆக.14-
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 100 கிலோ கஞ்சாவை சேலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
சேலம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனிடையே வெளிமாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
100 கிலோ கஞ்சா
அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் 5 மூட்டைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து லாரியில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (வயது 36), அரியலூரை சேர்ந்த சதீஷ்குமார் (40) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிவக்குமார், சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்