தமிழக பட்ஜெட் குறித்து ஈரோடு மக்களின் கருத்து

தமிழக பட்ஜெட் குறித்து ஈரோடு மக்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.;

Update: 2021-08-13 22:16 GMT
ஈரோடு
தமிழக பட்ஜெட் குறித்து ஈரோடு மக்கள் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.
இ-பட்ஜெட்
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் தமிழக அரசு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ஈரோட்டை சேர்ந்த மக்களின் கருத்துகள் விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.பாலகிருஷ்ணன்:-
ஈரோட்டில், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு போன்ற திட்டம் வரவேற்கத்தக்கது. டீசல் விலை குறைந்தால் அனைத்து விலைவாசியும் குறைய அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் கடன்
விவசாய கடன் தள்ளுபடி கட்டாயம் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை விரைவுபடுத்தி அமலாக்க வேண்டும். முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கும் சிகிச்சை பெறலாம் என்பது சிறந்தது. சிறு, குறு தொழிலுக்கு நிலுவையில் உள்ள கடனுடன், கூடுதல் கடன் வழங்கவும், மேம்பாட்டுக்கு வழிகள் வகுத்து தரப்படும் என கூறி உள்ளனர். இது சிறு, குறு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
வரி உயர்வு, விலை உயர்வு போன்ற அறிவிப்பு இல்லாதது அனைத்து தரப்பினரிடையே இருந்த அச்சத்தை தவிர்த்து உள்ளது. பின் தங்கிய மாவட்டங்களில் சிப்காட் அறிவித்திருப்பது வரவேற்கலாம். இருப்பினும், பல புதிய திட்டங்கள், நீண்ட கால திட்டங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில் முனையம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சிவநேசன்:-
விபத்தில்லா தமிழகத்துக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு, சிங்கார சென்னை என 2-ம் திட்டத்தை வரவேற்கலாம். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பை வரவேற்றாலும், புதுடெல்லி போன்று ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வராதது ஏமாற்றம். ஈரோட்டுக்கு கூடுதல் சிப்காட் அறிவிக்காதது ஏமாற்றம். கோவை,  சேலம் நெடுஞ்சாலை தொழில் முனையம் பற்றி பேசப்பட்டாலும், அறிவிப்பு இல்லை. 
மத்திய அரசால் சொல்லப்பட்ட பாதுகாப்பு சார்ந்த தொழில் முனையம் மட்டும் கோவையில் அமையும் என கூறியுள்ளனர்.
குறு, சிறு தொழில்களுக்கு மானியங்கள், வட்டி குறைப்பு, கொரோனாவில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள், ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஈரோட்டில் ஜவுளி சார்ந்த தொழில் நுட்ப கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டும், பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சீரமைக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் உள்ளது. ஜி.எஸ்.டி.க்கு முந்தைய ரூ.28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க ஒரு சமாதான திட்டம் கொண்டு வரப்படும் என்பது வரவேற்கத்தக்கது. தற்போது தொழில், வணிகம் முடங்கி உள்ள சூழலில், தொழில், வணிகத்துக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், மானியம், வட்டி குறைப்பு ஏதும் அறிவிக்கப்படாதது வியாபாரிகளுக்கு ஏமாற்றம்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி:-
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு வரவேற்கலாம். அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களுக்கு, ரூ.215 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 16 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ள நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கினால், கூடுதல் சலுகை கிடைக்கும்.
கட்டுமான தொழிலாளர் நலவாரியம் புதுப்பிக்கப்பட்டு, நலவாரிய நிதியை கொண்டு வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது சிறப்பு அம்சமாகும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 100 நாளில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியை, ரூ.300 ஆக்கியது பயன் தரும். ரூ.1,000 உரிமை தொகை பெற, பெண் குடும்ப தலைவராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லாதது என தெளிவுபடுத்தியதை வரவேற்கலாம்.
பெண்கள் பாதுகாப்பு
காங்கிரஸ் கட்சி ஈரோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாஷா:-
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உதவி அறிவிப்பு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை அரசு உறுதி செய்யும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது சிறப்பு.
ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

மேலும் செய்திகள்