சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 400 மீட்டர் தூரத்தை 1.36 நிமிடத்தில் கடந்த கர்ப்பிணி
கலபுரகியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 400 மீட்டர் தூரத்தை 1.36 நிமிடத்தில் ஓடி கடந்து கர்ப்பிணி தேர்வானார். என்ஜினீயரிங் படித்திருந்தாலும் போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்றுவது தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
கலபுரகி: கலபுரகியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 400 மீட்டர் தூரத்தை 1.36 நிமிடத்தில் ஓடி கடந்து கர்ப்பிணி தேர்வானார். என்ஜினீயரிங் படித்திருந்தாலும் போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்றுவது தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
2½ மாத கர்ப்பிணி
கர்நாடகத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. இதற்கான உத்தரவை அரசு ஏற்கனவே பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு மாநிலம் முழுவதும் உடல் தகுதி தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதுபோல், பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்த அஸ்வினி (வயது 24) என்பவரும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, கலபுரகி மாவட்டம் புறநகரில் உள்ள போலீஸ் மைதானத்தில் கலபுரகி, பீதர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ள அஸ்வினியும் சென்றிருந்தார். திருமணமான அவர், தற்போது 2½ மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல் தகுதி தேர்வில் தேர்வான பின்பு தான் எழுத்து தேர்வில் அவரால் கலந்து கொள்ள முடியும்.
400 மீட்டர் தூரத்தை...
அஸ்வினி கர்ப்பிணியாக இருந்ததால், உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளாமல் இருக்க ஏதேனும் சலுகைகள் உண்டா? என போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்துளளார். ஆனால் அதுபோன்ற சலுகைகள் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, கலபுரகி மைதானத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் அஸ்வினி விதிமுறைப்படி கலந்து கொண்டார். அவர், 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 400 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 36 நொடிகளில் ஓடி கர்ப்பிணியான அஸ்வினி கடந்தார். இதன் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக நடந்த உடல் தகுதி தேர்வில் அஸ்வினி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அஸ்வினி நிருபர்களிடம் கூறியதாவது;-
என்ஜினீயரிங் படிப்பு
நான் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளேன். ஆனாலும் போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பமாகும். குறிப்பாக சப்-இன்ஸ்பெக்டராக ஆக வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்கு முன்பு 2 முறை சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் பங்கேற்று எழுத்து தேர்வில் தோல்வி அடைந்திருந்தேன். தற்போது 3-வது முறையாக சப்-இன்ஸ்பெக்டராக முயற்சித்து வருகிறேன். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த பிறகு நான் கர்ப்பம் அடைந்தேன்.
கர்ப்பிணி என்பதால் உடல் தகுதி தேர்வில் ஏதேனும் விதிவிலக்கு உள்ளதா? என விசாரித்தேன். அப்படி எந்தவொரு விதிவிலக்கும் இல்லை என்பதால், மிகுந்த தைரியத்துடன் 400 மீட்டர் தூர ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டு உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த முறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.