சித்த மருத்துவமனையில் வருமான வரி சோதனை
மதுக்கூரில், சித்த மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.1 கோடியே 14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மதுக்கூர்;
மதுக்கூரில், சித்த மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.1 கோடியே 14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சித்த மருத்துவமனையில் சோதனை
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மெயின் ரோட்டில் அறிவழகன்(வயது 52) என்பவர் சித்த மருத்துவத்துக்கு படித்து சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர், சித்த மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இவரது மருத்துவமனையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சோதனை நடத்தினர். அப்போது அவர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.
ரூ.1 கோடியே 14 லட்சம் பறிமுதல்
மேலும் அவரது மருத்துவமனையில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.1 கோடியே 14 லட்சம் கட்டு, கட்டாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வருமான வரித்துறையினர் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தி அறிவழகனிடம் அந்த பணம் குறித்து விடிய, விடிய விசாரணை செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி வரை நடந்த இந்த விசாரணையில் இந்த பணத்துக்கு முறையான கணக்கு இல்லாததால் இந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மருத்துவமனைக்கு சீல் வைப்பு
மேலும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததற்காக அவர் மீது மதுக்கூர் போலீசாரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரது மருத்துவமனைக்கு உதவி கலெக்டர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
சித்த மருத்துவமனையில் இருந்து ரூ.1 கோடியே 14 லட்சத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுக்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.