மதுக்கரை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மதுக்கரை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-08-13 20:28 GMT
போத்தனூர்

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பிரிவு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றார். 

இந்த நிலையில் நாகராஜூக்கு, மதியம் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு  சாப்பாடு கொண்டு சென்றார்.  பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.

  இதேபோல அதே பகுதியில் உள்ள கார்த்திகேயன் (36) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். மேலும் அதற்கு அடுத்த வீட்டில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து  அங்கிருந்த பணம் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்த புகாரின் பேரில், மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்