ஓணம் பண்டிகை தொடங்கியும் களை கட்டாத தோவாளை பூ மார்க்கெட்

ஓணம் பண்டிகை தொடங்கியும் கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்க வரவில்லை. இதனால், தோவாளை பூ மார்க்கெட் களை கட்டாததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-08-13 18:36 GMT
ஆரல்வாய்மொழி:
 ஓணம் பண்டிகை தொடங்கியும் கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்க வரவில்லை. இதனால், தோவாளை பூ மார்க்கெட் களை கட்டாததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
 ஓணம் பண்டிகை
தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. 
பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா காலங்களில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். மற்ற நாட்களில் விலை குறைவாக இருக்கும்.
 முக்கியமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகையை யொட்டி பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். அப்போது, சுமார் 500 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும். கேரள வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்வார்கள்.
 தொடங்கியது
 இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நேற்றுமுன்தினம் தொடங்கியது. ஆனாலும், கொரோனா காரணமாக கேரளாவில் இருந்து ஒரு வியாபாரி கூட தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோவாளை பூ வியாபாரிகள் கவலையில் உள்ளனர். சென்ற ஆண்டை போலவும் இந்த ஆண்டும் வியாபாரம் மந்தமாக இருக்குமோ? என அச்சத்தில் உள்ளனர். ஆயினும் நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ததால் பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.450-க்கு விற்பனையான பிச்சி நேற்று கிலோ ரூ.600-க்கும், மல்லிகை ரூ.500-ல் இருந்து ரூ.700-க்கும் விற்பனையாகின.
விலை விவரம்
 மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.100, முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ. 700, வாடாமல்லி ரூ.70, தாமரை(100 எண்ணம்) ரூ.200, கோழிப்பூ ரூ.70, துளசி ரூ.40, பச்சை ரூ.7, ரோஸ்(100 எண்ணம்) ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.110, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.160, மஞ்சள் ேகந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.75, சிவந்தி மஞ்சள் ரூ.120, சிவந்தி வெள்ளை ரூ.170 என விற்பனையானது.
களை கட்டவில்லை
ஓணப்பண்டிகை விற்பனை குறித்து பூ வியாபாரி கிருஷ்ண குமார் கூறுகையில், கேரளாவில் 12-ந்தேதி ஓணம் 1-வது திருவிழா தொடங்கியது. இன்று (அதாவது நேற்று) 2-வது நாள் ஓணம் பண்டிகை. ஆனால், கேரளாவில் இருந்து இதுவரையும் பூ மார்க்கெட்டுக்கு ஒரு வியாபாரி கூட வரவில்லை என்பது மிகவும் வேதனை தருகிறது. பொதுவாக ஓணம் பண்டிகை 1-வது திருவிழா தொடங்கும் போது சுமார் 50 டன் பூக்கள் மார்க்கெட்டிற்கு வரும், உடனே விற்று தீர்ந்து விடும். ஆனால், தற்போது மார்க்கெட்டுக்கு வரும் 20 டன் பூக்களும் விற்பனையாகாமல் தேக்கம் அடைகிறது. எப்போதும், களை கட்டும் ஓணப்பண்டிகை வியாபாரம் இந்த ஆண்டு எப்படி இருக்குமோ? என எங்களுக்கு கவலையாக உள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகள்