அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் வாலிபருக்கு கத்தி வெட்டு
அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் வாலிபருக்கு கத்திவெட்டு விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அரக்கோணம்
கத்தி வெட்டு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு மோசூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மற்றொரு நபரின் கழுத்து பகுதியில் வெட்டி விட்டு ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் பலத்த காயம் ஏற்பட்ட நபரை போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வியாபாரம் செய்வதில் தகராறு
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் மார்க் ஆகியோர் விசாரணை நடத்தியதில் கத்தியால் வெட்டப்பட்டு காயம் அடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நபர் வாலாஜாபேட்டையை சேர்ந்த மணிகண்டன் (24) என்பதும், தப்பி ஓடிய நபர் மணிகண்டனின் உறவினர் குபேந்திரன் என்பதும் தெரியவந்தது.
இருவரும் ரெயில்களில் மசாலா பொறி வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரம் செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குபேந்திரன், கத்தியால் மணிகண்டனை வெட்டியது தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குபேந்திரனை தேடி வருகின்றனர்.