வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் பெண் காவலரை தாக்க முயன்ற வார்டன் பணியிடை நீக்கம்
வேலூர் மத்திய பெண்கள் ஜெயில் காவலரை தாக்க முயன்ற வார்டனை பணியிடை நீக்கம் செய்து ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்
வார்டன் மீது புகார்கள்
வேலூர் தொரப்பாடியில் மத்திய பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி மற்றும் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 100-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயில் வார்டனாக ஞானசவுந்தரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பணியில் கவனக்குறைவாக செயல்படுவதாகவும், காவலர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் உயர்அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து விசாரணை நடத்த உயர்அதிகாரிகள் வார்டன் ஞானசவுந்தரிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் புகார்கள் தொடர்பாக எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் மத்திய பெண்கள் ஜெயிலில் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஜெயில் காவலர்கள், வார்டன் ஞானசவுந்தரி மீது மீண்டும் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வார்டனை அழைத்து வரும்படி சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெண் ஜெயில் காவலர் ஒருவர் சூப்பிரண்டு அழைப்பதாக வார்டன் ஞானசவுந்தரியிடம் தெரிவித்துள்ளார். அற்கு அவர் ஜெயில் சூப்பிரண்டை சந்திக்க வர முடியாது என்று கூறி உள்ளார். பின்னர் அந்த பெண் ஜெயில் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென தாக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து ஜெயில்காவலர், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினிணிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வார்டன் ஞானசவுந்தரியை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் ஜெயில் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.