அரசு மீன் அங்காடிக்கு ‘சீல்’

வெளிமார்க்கெட்டில் மீன்களை கொள்முதல் செய்ததால் அரசு மீன் அங்காடிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2021-08-13 17:45 GMT
கோத்தகிரி,

வெளிமார்க்கெட்டில் மீன்களை கொள்முதல் செய்ததால் அரசு மீன் அங்காடிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அரசு மீன் அங்காடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடல் அருகே, தமிழக மீன் வளர்ச்சிக்கழகத்திற்கு சொந்தமான மீன் விற்பனை அங்காடி உள்ளது. இந்த அங்காடியை கோத்தகிரியை சேர்ந்த ரத்தினம் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அவர் மீன் வளர்ச்சிக்கழகம் கொடுத்த இலக்கை எட்டவில்லை. மேலும் மீன் வளர்ச்சிக்கழகத்திடம் இருந்து மீன்களை கொள்முதல் செய்யாமல், வெளிமார்க்கெட்டில் இருந்து கொள்முதல் செய்து விற்பனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே மீன் அங்காடியை காலி செய்ய மீன் வளர்ச்சிக்கழக அதிகாரிகள்  வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரத்தினம் அங்காடியை காலி செய்யாமல் இருந்தார். இது தொடர்பாக மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

பின்னர் நடந்த விசாரணையின்போது, ரத்தினம் அங்காடியை காலி செய்வதாக போலீசிடம் உறுதி அளித்து, எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் அங்காடியை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் அந்த அங்காடியை கையகப்படுத்த மீன் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஆணை பிறப்பித்து, அதனை கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கலெக்டரின் உத்தரவின்பேரில் அந்த அங்காடி உள்ள இடத்துக்கு நேற்று காலை 7.45 மணிக்கு மீன் வளர்ச்சிக்கழக மேலாளர் ஜோதி லட்சுமணன் மற்றும் துணை மேலாளர் தாமரை செல்வன், கோத்தகிரி உதவி தாசில்தார் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், குன்னூர் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் மற்றும் போலீசார் சென்றனர்.

தொடர்ந்து ஏற்கனவே இருந்த பூட்டை உடைத்து, அங்காடிக்குள் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். பின்னர் புதிய பூட்டு போட்டு, அங்காடிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அங்காடிக்குள் இருந்த தராசு, அலமாரி, மீன் வைக்கும் பெட்டி உள்பட 29 பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோவையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்