ஆடி கடைசி வெள்ளிக்கிழமை; நெல்லையில் மூடப்பட்ட கோவில்களின் முன்பு வழிபட்ட பக்தர்கள்
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் மூடப்பட்ட கோவில்களின் முன்பு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நெல்லை:
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நெல்லையில் மூடப்பட்ட கோவில்களின் முன்பு பக்தர்கள் வழிபட்டனர். பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.
வழிபாட்டு தலங்கள் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை.
இதேபோன்று தேவலாயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. அங்கு வழிபட பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வழிபாட்டு தலங்களின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தன.
கோவில் முன்பு வழிபட்ட பக்தர்கள்
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும். தற்போது பக்தர்களுக்கு தடை காரணமாக, கோவில்களுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனினும் கோவில்களில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவில், டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பூட்டப்பட்டு இருந்ததால், அவற்றின் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
நெல்லையப்பர் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் பலரும் வெளியில் நின்றே வழிபட்டு சென்றனர்.
வீடுகளில் தொழுகை
மேலப்பாளையம், பேட்டை, டவுன், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருந்தன. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகை நேற்று நடத்தப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
இதேபோன்று பாளையங்கோட்ைட தூய திரித்துவ பேராலயமும் மூடப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்கள் பிரார்த்தனை நடத்த அனுமதிக்கப்படவில்லை.