12 மணிநேர மின்தடையால் கிராம மக்கள் பாதிப்பு

தவளக்குப்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இதனால் 12 மணிநேர மின்தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-08-13 16:07 GMT
பாகூர். ஆக.
தவளக்குப்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்மாற்றிகள் சேதமடைந்தன. இதனால் 12 மணிநேர மின்தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இடி மின்னலுடன் மழை
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. 
இந்த நிலையில் தவளக்குப்பம் மற்றும் சுற்றுப்பகுதியான ஆண்டியார்பாளையம், இடையார்பாளையம், பூரணாங்குப்பம், நல்லவாடு, புதுக்குப்பம், தானாம்பாளையம், அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மழையின்போது மின்தடை ஏற்பட்டது.
மின்மாற்றிகள் பழுது
இதில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள 2 மின்மாற்றிகள் பழுதடைந்தன. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் தூக்கத்தை இழந்தனர்.
இதுபற்றி அறிந்த சபாநாயகர் செல்வம், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்தனர். இதையடுத்து நேற்று காலை 9 மணியளவில் மின் வினியோகம் சீரானது. சுமார் 12 மணிநேர மின்தடையால் தவளக்குப்பம் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
துணை மின்நிலையம்
மின் பிரச்சினையை தீர்க்க வரும் காலத்தில் புதைவட மின் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், துணை மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்